Thursday, November 23, 2006

Soya,சோயா

Issue date : 08-Nov-2006(kumudam)

சோயா மாவை ‘ஒண்டர்பீன்’ என்று கூறி புளகாங்கிதப்படுகிறது அமெரிக்கன் சோயாபீன்ஸ் அசோசியேஷன். வியப்புக்குரிய இந்த சோயாவை சப்பாத்தி, பூரி, கட்லட், வடை, பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, சோயா உருண்டைக் குழம்பு, பொரியல் என்று கலந்து கட்டி அடிக்கலாம். ஆனால், வெறும் சோயா மட்டுமே உபயோகித்து சமைக்காமல் மற்ற காம்பினேஷனுடன்தான் சமைக்கவேண்டும்.

சோயாவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும் சமையல் நிபுணர்களும் அறிவுறுத்திக்கிட்டே இருக்காங்க. ஆனால், சோயாவை எடுத்துக்கொண்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுகிறதே என்று நிறைய குடும்பத் தலைவிகள் வருத்தத்துடன் கேட்பதுண்டு. முதன்முதலாக சோயா சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடும்போது அஜீரணத் தொல்லைகள் சிலருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சில குறிப்புகளை மனதில் கொண்டு சோயாவைச் சமைத்தால், அஜீரணக் கோளாறுகளிலிருந்து எளிதாக எஸ்கேப் ஆகலாம்.

கோதுமை மாவுடன் சோயாபீன்ஸை சேர்த்து அரைக்கும்போது... சோயாவை வெறும் வாணலியில் சூடாகும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு 4 கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ சோயா என்ற கணக்கில் சேர்த்து, மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் சப்பாத்தி செய்யும்போது இந்த மாவைப் பயன்படுத்தினால், மறைமுகமாக புரதச் சத்தும் சேர்ந்துவிடும். சோயாவை வறுப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப்பும் மிகக் குறைவு.

சோயா உருண்டைகளைப் பயன்படுத்தும்போது... உருண்டைகளை வெந்நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டுங்கள். அதைப் பிழிந்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு மறுபடியும் பிழிந்த பிறகே சமையலில் பயன்படுத்த வேண்டும்.

சோயா உணவுகளை ஒரேயடியாக அதிகஅளவு சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்து சாப்பிடவேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... இதற்கு சோயாவும் விதிவிலக்கல்ல. எந்தவிதமான சமையலில் சேர்க்கும்போதும், அதில் சோயாவை 4_க்கு ஒரு பங்குக்கு மேல் சேர்க்கவேண்டாம்.

தட்டை, முறுக்கு செய்ய வைத்திருக்கும் மாவில் சோயாமாவு சிறிதளவு சேர்த்தால் ருசி மாறாது, அதிக எண்ணெயும் குடிக்காது. ஒரு தடவை சாப்பிட்டு விட்டு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு விட்டதே என்று சோயாவை சமையலிருந்து ஒதுக்கிவிட வேண்டாம், அதிகமாகச் சேர்த்துக்கொள்ளாமல், சிறிதளவு சேர்த்தால் எந்தத் தொந்தரவும் இருக்காது... சுருக்கமாய்ச் சொன்னால் சோயா, ஒரு மாயாஜாலம்!

கேள்வி பதில் :

சாதாரண பிரஷர் குக்கரில் அரிசி சமைக்கும் முறைக்கும், மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் முறைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? பிரஷர் குக்கரில் வைக்கும் அளவு தண்ணீர்தான் மைக்ரோவேவ்ஓவனில் வைக்க வேண்டுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். மைக்ரோவேவ் ஓவனில் வைத்தால் மட்டும், சாதம் சரியாக வருவதில்லையே?

_ ஜெயந்தி முரளிதரன், ஆலப்பாக்கம்.

பிரஷர் குக்கரில் சமைப்பதைவிட ஓவனில் சமைக்கும்போது, சிறிதளவு தண்ணீர் அதிகமாக விடவேண்டும். தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து அதே தண்ணீரில் சமைக்கலாம். அதாவது, குக்கரில் ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்றால் மைக்ரோவேவ் ஓவனில் மூன்று கப் அரிசிக்கு மூணேகால் கப் தண்ணீர் வைத்தால், சரியாக இருக்கும். புழுங்கலரிசியாக இருந்தால் ஒரு கப் அரிசிக்கு மூணே முக்கால் கப் தண்ணீரும், ஒரு கப் பாசுமதி அரிசிக்கு இரண்டேகால் கப் தண்ணீரும் தேவைப்படும். எப்போதும் ஓவனில் வைக்கும்போது பாத்திரத்தில் தண்ணீரும், அரிசியும் சேர்ந்து பாதி அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டால், பொங்கி வழியாமல் இருக்கும்! ஸீ

சோயா கார சிப்ஸ்

தேவையான பொருட்கள் : மைதா மாவு _ 1 கப், சோயா மாவு _ கால் கப், நெய் _ 2 டீஸ்பூன், உப்பு _ அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் _ 2 சிட்டிகை, கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் _ அரை டீஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை : மைதாவுடன் சோயாமாவு சேர்த்து சலித்துக் கொள்ளவும். ஒரு அகல பேஸினில் நெய்யை விரல்களால் நன்கு குழைக்கவும். பிறகு அதில் சலித்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசறி விடவும். நெய் முழுவதும் மாவில் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவைப் போல பிசையவும். கால் அங்குல கனத்திற்குச் சப்பாத்தி போல இடவும். ஒரு கத்தியால் சிறிய சதுரங்களாக வெட்டவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுங்கள்!

சில்லி சோயா :

தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள், சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

அரைத்துக் கொள்ளவும்: பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.

செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு சூடாக்கவும். கொதி வரும்போது சோயா உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து சோயாவின் மீது தெளித்து கைகளால் கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!

(கமகமக்கும்)
- ஜனனி

From Aval Vikatan (23-05-2005)
சோயா பிரியாணி



தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப், சோயா உருண்டைகள் - 15, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், புதினா - அரை கட்டு, மல்லித்தழை - கால் கட்டு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் - கால் கப், எலுமிச்சம் பழம் - 1 மூடி, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரிசியை கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். சோயாவை கொதிக் கும் நீரில் பத்து நிமிடம் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் இரு முறை அலசி எடுங்கள். வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்குங்கள். மிளகாயை கீறி வையுங்கள். இஞ்சி, பூண்டை அரைத்து வையுங்கள். புதினா, மல்லியை சுத்தம் செய்து வையுங்கள். குக்கரில் நெய், எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின்னர் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேருங்கள். தயிர் நன்கு கொதித்து எண்ணெய் கசிந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீ ருடன் சேருங்கள். தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள்.

சோயா சமோஸா


தேவையான பொருட்கள்:

மேல் மாவிற்கு: மைதா - 1 கப், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.

பூரணத்திற்கு: சோயா உருண்டைகள் - 10, கடலை பருப்பு - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
மைதாவுடன் சீரகம், 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருட்டி அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி வையுங்கள். கடலைப் பருப்பில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து தண்ணீரை வடித்து விடுங்கள். சோயாவை கொதி நீரில் பத்து நிமிடங்கள் போட்டு பின்னர் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து நன்கு பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பருப்பு மற்றும் மிளகாய்த்தூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், (பொடியாக நறுக்கப்பட்ட) மல்லித்தழை, எ.சாறு, உப்பு சேர்த்து கலந்து வையுங்கள். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சிறிய சப்பாத்திகளாக தேய்த்து அதை இரண்டாக வெட்டுங்கள். ஒரு பாதியை கோன் போல மடித்து நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டுங்கள். இதே போல எல்லாவற்றையும் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்

சோயா சுப்ரீம்

தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 15, மக்ரோன் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை டம்ளர், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3, கேரட் - 1, பீன்ஸ் - 10, நெய் - 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுத்து பிறகு குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி பிழிந்து ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்குங்கள். மூன்று கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மக்ரோனை வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை நசுக்கி வையுங்கள். பாதியளவு தேங்காய்ப் பாலை எடுத்து அதில், நசுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உதிர்த்த சோயா, மக்ரோன் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து தேங்காய்ப் பால் வற்றும் வரை கிளறுங்கள். பிறகு வேக வைத்த காய்கறிகள், மீதமுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து கடைசியில் நெய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

No comments: