Friday, December 1, 2006

30 வகை முட்டை சமையல்!

Issue date : 4-Aug-2006
இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க!’’ என்பதுதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் ஏற்ற சரிவிகித உணவு முட்டை என்பதுதான் அதன் ஸ்பெஷல்! அதோடு, சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது என்பதுடன், அதை சமைப்பதும் எளிதுதான்.

ஆனால், ‘நீங்க என்னதான் சொல்லுங்க... முட்டையை வேக வைச்சுக் கொடுக்கிறது, ஆம்லெட், ஆஃப் பாயில் மாதிரி சில அயிட்டங்கள் தவிர வேற என்னதான் செஞ்சு கொடுக்கிறது முட்டையில?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்காகவே, உங்களுக்கு ‘மினி பிரியாணி மேளா’ மூலம் நன்கு அறிமுகமான கலைச்செல்வி சொக்கலிங்கம், பிரமாதமான 30 ரெசிபிகளை வழங்கி இருக்கிறார்.

எல்லாமே மிக எளிமையான செய்முறைகள்தான். எனவே முட்டைகளை வாங்கி, விதம் விதமாக, ருசி ருசியாக செய்து கொடுத்து, வீட்டில் எல்லோரிட மும் ஒரு பெரிய ‘சபாஷ்!’ பெறுங்கள்!

முட்டை மசாலா டோஸ்ட்


தேவையானவை: முட்டை & 4, பிரெட் & 5, கரம் மசாலாதூள் & கால் டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்) பூண்டு & 2 பல், சின்ன வெங்காயம் & 4 சேர்த்து அரைத்த விழுது & சிறிதளவு.

செய்முறை: பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள். மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.

முட்டை இடியாப்பம் மசாலா



தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், முட்டை & 3, சின்ன வெங்காயம் & 10, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.

கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள். நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள். விருந்துகளில் வைத்துப் பாருங்கள். விசாரணைகள் தூள் பறக்கும்!

முட்டை & வெஜ் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 6, முட்டைகோஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் (மூன்றும் பொடியாக நறுக்கியது) & ஒரு கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 3, கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள். ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள்.

குறிப்பு: முட்டையில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அடித்துக் கலக்கும்போது எப்படி அடித்தாலும் மஞ்சள்தூள் சிறு சிறு கட்டிகளாக நிற்கும். இதைத் தவிர்க்க, பாத்திரத்தில் முதலில் தேவையான மஞ்சள்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துவிட்டு, அதன் பிறகு முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால், உப்பு, மஞ்சள்தூள் கட்டியாகாமல் சீராகக் கரையும்.

ஈரமில்லாத பாத்திரத்தில் ஊற்றி அடித்தால், முட்டை நன்கு நுரைத்து வரும்.

முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 5, காலிஃப்ளவர் & 1, பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, பொட்டுக்கடலை மாவு & 3 டீஸ்பூன், மிளகுதூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செயுங்கள். தண்டுகளே இல்லாமல், மேலிருக்கும் வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகுதூள், பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். முட்டை களை உடைத்து அதில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காலி ஃப்ளவர் போட்டுக் கலந்து கொள் ளுங்கள். சிறிய ஆம்லெட்டு களாக ஊற்றியெடுத்துப் பரிமாறுங்கள்.

முட்டை & பிரெட் டோஸ்ட்


தேவையானவை: ஸ்வீட் பிரெட் & 6 ஸ்லைஸ், முட்டை & 4, பால் & ஒரு கப், சர்க்கரை & கால் கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்), நெய் & கால் கப்.

செய்முறை: காய்ச்சிய பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். (கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்கவேண்டும். சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு வெந்துவிடும்). தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி, ஒரு பிரெட்டை எடுத்து, முட்டை கலவையில் நனைத்தெடுத்து கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

முட்டை கொத்து பரோட்டா



தேவையானவை: முட்டை & 3, பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 2, கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், தனியாதூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & கால் டீஸ்பூன், பரோட்டா & 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை & 3 டீஸ்பூன், கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: பரோட்டாவை பொடிப் பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் நன்கு எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கிக் கொண்டிருக்கும்போதே, கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி, தக்காளியையும் போட்டுக் கிளறுங்கள். ஒரு கிளறு கிளறியபின், பரோட்டா துண்டுகளையும் போட்டுக் கிளறவேண்டும். பரோட்டா நன்கு சூடானதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, தோசைக்கரண்டியால் கொத்திக் கொத்திக் கிளறவேண்டும்.

பிறகு, அடித்து வைத்திருக்கும் முட்டையையும் பரவலாக ஊற்றி, நன்கு கொத்திக் கொத்திக் கிளறுங்கள். தக்காளி சேர்ந்திருப்பதால், ஓரளவுதான் உதிரும். நன்கு கிளறி, மல்லித்தழை தூவி, இறக்குங்கள். காரம் வேண்டு மென்றால், மிளகுதூள் தூவிக் கிளறிப் பரிமாறுங்கள். ஆனியன் ராய்த்தா, இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

முட்டை & உருளை -சாப்ஸ்



தேவையானவை: முட்டை & 3, உருளைக்கிழங்கு (பெரியது) & 2, மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பட்டை & 1, சோம்பு & கால் டீஸ்பூன், இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 6 பல், ரஸ்க் தூள் & 4 டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, மஞ்சள்தூள் & சிறிதளவு, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள். கொடுத்துள்ள பொருட்களில், மிளகு முதல் பூண்டு வரையிலான பொருட்களை நன்கு அரைத்து மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள். இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, குலுக்கி குலுக்கிவிட்டு வேகவிடுங்கள்.

ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் நனைத்து, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுங்கள். குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது. விருந்துகளுக்கு ‘கிராண்டா’ன அயிட்டம்!

மலபார் முட்டை தொக்கு


தேவையானவை: முட்டை & 3, சின்ன வெங்காயம் & 15, காய்ந்த மிளகாய் & 10, தேங்காய் எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன்.

செய்முறை: முட்டையை உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நைஸாக அரைத்தெடுங்கள். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சுருளச் சுருள வதக்குங்கள். வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, மசாலாவில் போட்டுக் கிளறுங்கள். முட்டையில் மசாலா நன்கு சார்ந்ததும் இறக்குங்கள்.

இந்த கேரள ஸ்டைல் தொக்கு, தயிர் சாதத்துக்கு ஏ&ஒன் சைட்&டிஷ்.

முட்டை தொக்கு



தேவையானவை: முட்டை & 4, பெரிய வெங்காயம் & 2, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & முக்கால் டீஸ்பூன், தனியா தூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை & தலா சிறிதளவு.

செய்முறை: முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, விரும்பினால் சிறிது சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்குங்கள். மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, எல்லாம் சேர்ந்து ‘தளதள’வென வரும்போது, முட்டையை மேலும் கீழும் கீறி, மசாலாவில் போட்டு நன்கு கிளறி, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.

சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமான சைட்&டிஷ்.

ஸ்பெஷல் முட்டை தொக்கு



தேவையானவை: முட்டை & 4, சின்ன வெங்காயம் & 10, மிளகு & 3 டீஸ்பூன், சோம்பு & அரை டீஸ்பூன், பூண்டு & 10 பல், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) பட்டை & 1, உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை & தலா சிறிதளவு.

செய்முறை: முட்டையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மிளகு, சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பட்டை, மஞ்சள்தூள் சேர்த்து அரைத் தெடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, அரைத்த மசாலாவையும் போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், முட்டையை இரண்டாக வகுந்து, அதில் போட்டு கிளறி, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.


முட்டை தோசை



தேவையானவை: தோசைமாவு & ஒரு கப், முட்டை & 2, மிளகு&சீரகத்தூள் & ஒரு டீஸ்பூன், பால் & ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, (உப்பு சேர்க்காமல்) நன்கு நுரை வரும்வரை அடித்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு&சீரகத் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் நன்கு அடித்து வையுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றுங்கள். அடித்துவைத்திருக்கும் முட்டைக் கலவையில், பாதியை தோசையின் மேல் ஊற்றி, தோசைக்கல்லைக் கைகளில் எடுத்து வட்ட வடிவில் சுற்றவேண்டும் (ஆப்பச் சட்டியை சுற்றுவது போல). முட்டை அப்படியே தோசையின் மேல் பரவி, கல்லின் சூட்டுக்கு நன்கு வெந்துவிடும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுங்கள்.

பூண்டுத் துவையலை, இந்த முட்டை தோசையின் மேல் பரவலாகத் தடவி, சுருட்டி, ‘தோசை ரோல்’ ஆக செய்து சாப்பிட்டால், அந்த ருசியே அலாதி!

சீஸ் குடமிளகாய் ஆம்லெட்



தேவையானவை: முட்டை & 3, குடமிளகாய் & 1, முட்டைகோஸ் & 100 கிராம், (விருப்பப்பட்டால்) பொடியாக நறுக்கிய கேரட், காலிஃப்ளவர் & அரை கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை & 2 டீஸ்பூன், சீஸ் & ஒரு சிறு கட்டி, எண்ணெய் & தேவையான அளவு, மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & சுவைக்கேற்ப.

செய்முறை: முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள். அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். சீஸைத் துருவிக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள். விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

முட்டை & மட்டன் போண்டா



தேவையானவை: முட்டை & 4, பிரெட் ஸ்லைஸ் & 4, மட்டன் கைமா (கொத்துக் கறி) & 100 கிராம், இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு & ஒரு டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, மஞ்சள்தூள் & தேவையான அளவு, எண்ணெய் & தேவையான அளவு, பச்சை மிளகாய் & 3.

செய்முறை: முட்டையை உப்புப் போட்டு வேகவையுங்கள். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, கொத்துக்கறி, இஞ்சி&பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுங்கள். அரைத்த கலவையில் பொட்டுக்கடலை மாவையும் உப்பையும் சேர்த்து நன்கு பிசையுங்கள்.

பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, ஒரு கிண்ணம் போல செய்து, அதனுள் வேகவைத்த முட்டையை வைத்து மூடுங்கள். பிரெட்டை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, முட்டை உருண்டையின் மேல் தடவி, ‘ரோல்’ செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இந்த போண்டாக்களை அப்படியே போட்டுப் பொரித்தெடுங்கள். விருந்துகளில் செய்து வைத்தால், முதலிடம் பிடிக்கும் அயிட்டம் இதுவாகாத்தாக் இருக்கும்.

எக்&சிக்கன் சப்பாத்தி ரோல்ஸ்



தேவையானவை: சப்பாத்தி & 4, முட்டை & 4, சிக்கன் (எலும்பு இல்லாதது) & 150 கிராம், பெரிய வெங்காயம் & 1, மிளகுதூள் & கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & சுவைக்கேற்ப. அரைக்க: மிளகு & கால் டீஸ்பூன், சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) & கால் டீஸ்பூன், இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 3 பல், பட்டை & 1.

செய்முறை: சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து, எண்ணெயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள். முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும். வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

குறிப்பு: மதியம் செய்து மிச்சமான சிக்கன் கிரேவி இருந்தாலும், இந்த சப்பாத்தி ரோல்ஸ் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்

முட்டை குழிப்பணியாரம்



தேவையானவை: முட்டை & 4, இட்லி மாவு & அரை கப், மிளகு&சீரகத் தூள் & 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & கால் டீஸ்பூன்.

செய்முறை: சிறிது தண்ணீரில், மிளகு&சீரகத் தூள், மஞ்சள்தூள், உப்பு கரைத்து முட்டையை ஊற்றி அடித்துக்கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவேண்டும். (வெறும் முட்டையை மட்டும் பணியாரமாக ஊற்றியெடுத்தால், ஆறியதும் அமுங்கிவிடும். இட்லி மாவு கலந்து சுடுவதால், அப்படியே உருண்டையாக இருக்கும்).

முட்டை இடியாப்பம் (தாளித்தது)


தேவையானவை: முட்டை & 4, இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், தேங்காய்ப்பால் & ஒரு கப், சின்ன வெங்காயம் & 6, காய்ந்த மிளகாய் & 4, கடுகு, உளுத்தம்பருப்பு & தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & ஒரு ஆர்க்கு, எண்ணெய் & 4 டீஸ்பூன், உப்பு & ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்திவையுங்கள். சிறிது நேரத்தில், தேங்காய்ப்பாலை இடியாப்பம் இழுத்துக்கொண்டு ‘பொலபொல’வென உதிரியாகி விடும்.

பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். ஊறவைத்த இடியாப்பத்தை இதில் கொட்டி, இரண்டு கிளறு கிளறி, அடித்துவைத்த முட்டையை தூக்கி ஊற்றிக் கிளறுங்கள். தீயைக் குறைத்துவைத்து, இடியாப்பமும் முட்டையும் நன்கு உதிர் உதிராக வரும்வரை கிளறுங்கள். இதுவரை சுவைத்திருந்த புது ருசியில் இருக்கும் இந்த இடியாப்பம்.

முட்டை ஸ்டஃப்டு பூரி

Sunday, November 26, 2006

சமையல்-பிறமொழி சொற்களையும் அர்த் தங்களையும்

Issue date : 23-05-2003(aval0106.shtml)



சமையல் தொடர்பான பிறமொழி சொற்களையும் அர்த் தங்களையும் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்

பிளான்சிங் (Blanching): காய்கறி அல்லது பழங்களை வெந்நீரில் முக்கி எடுத்து அதன் தோலை உரிப்பது பிளான்சிங்.

சாப்பிங் (Chopping): காய்கறிகளை துண்டங்களாக நறுக்குவது/ வெட்டுவது.

க்ரஷ்ஷிங் (Crushing): உலர்ந்த பொருட்களை தூளாக (மையாக அல்ல, ரவை மாதிரி) திரிப்பது.

டீப் ஃப்ரை (Deep fry): பண்டம் மூழ்கும் அளவு வாணலியில் அதிக எண்ணெய் ஊற்றி அதில் போட்டு சிவக்க பொரிப்பது.

கார்னிஷ் (Garnish): சமைத்த பொருட்களின் மேல் மற்ற காய்கறி களை வைத்து அலங்கரிப்பது. (உ.ம்: துருவிய கொத்தமல்லி இலை)

கிரேட்டிங் (Grating): துருவுவது. (உ.ம்: தேங்காய், கேரட்)

சாட் (Saute): எண்ணெயில் வதக்குவது.

நீட் (Knead): நீர் விட்டு சேர்த்துப் பிசைவது (உ.ம்: கோதுமை மாவு, மைதா)

மாஷ் (Mash): உருளைக்கிழங்கு போன்றவற்றை வேக வைத்து தோல் நீக்கி மத்தினாலோ கையினாலோ மசிப்பது.

மெல்ட் (Melt): திடப் பொருட்களை உருக்கி திரவமாக மாற்றுவது (வெண்ணெய் - நெய்).

மின்ஸ் (Mince): பெரிதாக உள்ள காய் அல்லது கறியை பொடிப் பொடியாக அரிவது.

பேஸ்ட் (Paste): நைசாக உள்ள மாவு பண்டங்களுடன் தண்ணீர் சேர்த்து குழைப்பது.

பீலிங் (Peeling): தோல் நீக்கும் கருவியால் பீராய்ந்து எடுப்பது.

சீசனிங் (Seasoning): தாளிப்பது.

ஷேலோ ஃப்ரை (Shallow fry): குறைந்த அளவே எண்ணெய் வைத்து சிவக்கவிடாமல் பொரித்தெடுப்பது.

சீவ் (Sieve): சலிப்பது.

ஸ்டர் (Stir): கிளறுவது.

அ-கிராடின் (Au-Gratin): ஒரு பண்டத்தை சாஸ், ரொட்டித்தூள், சீஸ் இவற்றால் மூடி வேக (ஆஹநிக்) வைப்பது.

பேஸ்ட் (Baste): உணவு தயாராகும் போதே உலர்ந்து விடாதிருக்க அதை சுற்றியிருக்கும் எண்ணெய் அல்லது அது வேகும் திரவத்தை கரண்டியால் எடுத்து அவ்வப்போது மேலே ஊற்றுவது. (சோமாசி முதலியன பொரிக்கும்போது வாணலியில் உள்ள சூடான எண்ணெயை கரண்டியால் அதன் மேல் வாரி ஊற்றுவது மாதிரி).

பேட்டர் (Batter): பல பொருட்களை ஒன்றாக கலந்து மாவு கரைப்பது (பஜ்ஜி மாவு, கேக் கலவை, இட்லி மாவு).

பிளெண்ட் (Blend): இரண்டு மூன்று சாமான்களை சீராக ஒன்றாக கலப்பது.


காரமலைஸ் (Caramelize): வெறும் வாணலியில் சர்க்கரை போட்டு நீர் சேர்க்காமல் சூடாக்கி உருக்கி பிரவுன் நிறம் வரும்வரை கொதிக்க வைப்பது. (டநூயுப் கேக் பிரவுன் நிறம் வருவதற்காக இது சேர்க்கப்படும்.)

கட் அண்ட் போல்ட் (Cut & Bold): கலவையை கையால் பிசையாமல் மழுங்கலான கத்தி அல்லது முள்கரண்டியால் சீராக கலப்பது.

டோ (Dough): கெட்டியாக பிசைந்த மாவு (சப்பாத்தி மாவு).

டைஸ் (Dice): சிறு துண்டங்களாக வெட்டுவது.

மாரினேட் (Marinate): காய்கறி, மாமிசம், மீன் போன்றவற்றை துண்டங்களாக வெட்டி மசாலாவில் பிசறி ஊற வைப்பது.

பார் பாய்ல் (Par boil): அரை வேக்காடாக வேக வைப்பது.

பியூரி (Puree): பழம், காய்கறி, இவற்றை மசித்த கூழ் (தக்காளி).

விப் (Whip): கடைதல் (தயிர், முட்டை).

விஸ்க் (Whisk): நுரை வரும் அளவுக்கு வேகமாக விடாமல் அடித்தல் (முட்டை உடைத்து ஊற்றி கேக்கிற்கு அடிப்பது போல).

டஸ்ட் (Dust): லேசாக ரொட்டித் தூள் அல்லது மைதா போன்றவற்றில் பண்டத்தை புரட்டி எடுப்பது.

கிரைண்ட் (Grind): அரைப்பது.

ஸ்டீம் (Steam): ஆவியில் வேக விடுதல்.

ஃபர்மென்டேஷன் (Fermentation): நுரை பொங்க புளிக்க வைப்பது.

பேக் (Bake): உலர் சூட்டினால் பொருட்களை வேக வைப்பது (கேக் செய்முறை).

கன்சோம் (Consomme): கெட்டிப்படாமல் நீர்த்துள்ள சூப்.

ட்ரெய்ன் (Drain): பண்டங்களில் இருந்து நீரை வடித்து எடுப்பது.

கம்பைன் (Combine): ஒரு பொருளுடன் இரண்டோ அல்லது அதிகமாகவோ சேர்ப்பது.

டிஸ்சால்வ் (Dissolve): கரைப்பது

கிரேவி (Gravy): சமைக்கும் பண்டத்தில் உள்ள குழம்பு வடிவம்.

ரோல் (Roll): பூரி, சப்பாத்திக்கு மாவை உருட்டி வைத்து குழவியால் திரட்டுவது.

ஸ்க்குவீஸ் (Squeeze): பிழிந்தெடுப்பது (எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை திருகித் திருகி சாறெடுப்பது மாதிரி).

சோக் (Soak): ஊறவைப்பது (தண்ணீரிலோ அல்லது மற்ற திரவ பொருட்களிலோ).

ட்ரெட்ஜ் (Dredge): மாவினாலோ அல்லது சர்க்கரையினாலோ செய்த பொருளை மூடுவது (கோட் செய்வது).

கிரீஸ் (Grease): கேக், பர்பி போன்ற கலவைகளை துண்டங்கள் போடுவதற்காக தட்டை நெய் தடவி வைப்பது.

சிம்மர் (Simmer): கொதி நிலைக்கும் கீழே சமைப்பது.

மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய் போன்றவற்றை வீட்டிலேயே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் வாசனையாய் சமைக்க உதவும். கடாயில் போட்டு வறுத்துக் கொண்டிருக்காமல், ஃபிரீஸரில் ஒரு நாள் முழுவதும் வைத்து நேரடியாக மிக்ஸியில் போட்டு சுற்றுங்கள். நிமிடத்தில் பொடித்து விடலாம்.

புலவ், குருமா, உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் இவற்றை சமைத்து முடிக்கும்போது சிறிது சோம்புப் பொடி, ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் மணமோ மணம். சப்பாத்திக்கு செய்யும் சைட் டிஷ்களுக்கும் இதே உத்திதான்.