Saturday, November 18, 2006

வீட்டிலேயே செய்யுங்க வெரைட்டி ஃபாஸ்ட் ஃபுட்

கோஸ் சமோஸாவுக்கு 'ஓ' போடுங்க!
ரேவதி சண்முகம்


கோஸ் சமோஸா



தேவை (மேல்மாவுக்கு); மைதா 1 கப், கோதுமை மாவு 1 ஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன்.

உள் கலவைக்கு; கோஸ் 100 கிராம், பெரிய வெங்காயம் 3, மிளகாய் 1, சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 ஸ்பூன் மற்றும் சமோஸா பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை; மைதா, கோதுமை மாவு, உப்பு, அளவான தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாகப் பிசையுங்கள். கோஸ், வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், கோஸ், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன் றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங் கள். கோஸ் அரைப் பதம் வெந்ததும் உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

மாவிலிருந்து சிறுசிறு உருண்டை கள் எடுத்து நீளவாக்கில் மெல்லியதாகத் தேய்த்து, மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டுங்கள். அதன் ஒவ்வொரு முனையையும் சிறு சிறு முக்கோணங் களாக மடித்து உள்ளே கோஸ் கலவையை நிரப்புங்கள். பிறகு மீதமுள்ள மாவை, கலவை பிரிந்து வெளியே வராத படி சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒட்டுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பிறகு தீயை மிதமாக்கி, சமோஸாக்களைப் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுங்கள்.

இனி வரும் சமோஸாக்களுக்குப் பொதுவான, மேல்மாவுக் குத் தேவையான பொருட்களும் அதன் செய்முறைகளும் இங்கே...

தேவை; மைதா 1 கப், வெண்ணெய் அல்லது நெய் அல்லது டால்டா 50 கிராம், சமையல் சோடா சிட்டிகை, உப்பு அரை டீஸ்பூன், தண்ணீர் தேவைக்கு.

செய்முறை; மைதாவுடன் வெண்ணெய், சமையல் சோடா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையுங்கள்.


தஹி (தயிர்) சமோஸா


உள் கலவைக்கு; புளிக்காத கெட்டித் தயிர் ஒன்றரை கப், பச்சைப் பட்டாணி (வேகவைத்தது) அரை கப், சீரகத்தூள் 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை கால் கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் சமோஸா பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை; மேல்மாவைத் தயாராக எடுத்துக் கொள் ளுங்கள். தயிரை ஒரு மெல்லிய துணியில் ஊற்றி வடிகட்டி கெட்டி விழுதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு தட்டில் போட்டு லேசாகத் தேயுங்கள். மிருது வாகிவிடும். பிறகு இதனுடன் வேகவைத்த பட்டாணி, உப்பு, சீரகத்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தழை, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்குங்கள். இதனை குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வையுங்கள். கெட்டியாகிவிடும்.

பிசைந்த மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக, சற்று கனமாகத் தேயுங்கள். இதனை பொட்டலம் போல மடித்து, நடுவில் தயிர் கலவையை வையுங்கள். பிறகு கலவை வெளியே தெரியாதபடி மாவின் ஓரப் பகுதிகளைத் தண்ணீர் தொட்டு ஒட்டுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும் தீயை மிதமாக்கி சமோஸா பீஸ்களைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.


பட்டாணி சமோஸா


உள் கலவைக்கு ; கடலைப் பருப்பு அரை கப், பட்டாணி அரை கப், பெரிய வெங்காயம் 1, மிளகாய் 1, முந்திரி 8, திராட்சை 20, சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 1 துண்டு, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்ப்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டீஸ்பூன்.



செய்முறை; மேல்மாவைத் தயார்படுத்துங்கள். கடலைப் பருப்பை உப்பு சேர்த்து வேகவையுங்கள். பட்டாணியைத் தனியாக வேகவையுங்கள். வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, சீரகம் தாளித்து முந்திரி, திராட்சை சேர்த்து வதக்குங்கள். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் வேகவைத்த கடலைப் பருப்பு, பட்டாணி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, கனமாக அப்பளங்களாகத் தேயுங்கள். ஒவ்வொரு அப்பளத்தையும் பாதிப் பாதியாக வெட்டி, அதைப் பொட்டலம் போல மடித்து, நடுவில் பட்டாணிக் கலவையை நிரப்புங்கள்.


இந்தக் கலவை வெளியேறாதபடி ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். இனிப்பு சட்னி அல்லது தக்காளி சாஸ் இவற்றுக்கு மிகச் சரியான காம்பினேஷன்.

No comments: