Thursday, November 23, 2006

ஸ்வீட் கார்ன் சூப்,வெஜிடபிள் ஃபிங்கர்ஸ்

Issue date : 15-Nov-2005(Kumudam,குமுதம்)

மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான். குடும்பத் தலைவிகளுக்கு கிச்சனில் வேலை பெண்டு கழற்றும். வீட்டில் இருப்பவர்கள் சூடாக மொறுமொறுவென்று இதைக் கொண்டுவா, அதைச் செய்து தா என்று அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அவர்களுக்கு நொறுக்குத் தீனி செய்து கொடுக்கும் அதே நேரத்தில், அவர்களுடைய ஆரோக்கியத்தையும் மறந்து விடாதீர்கள்.

காலை வேளைகளில் சாம்பாரை கட் பண்ணி ஜிவ்வுன்னு காரசாரமான குழம்பு வகைகள், ரசம், சூப், டிபன் வகைகள் இதுதான் மழைக்கால மெனுவாக இருக்கவேண்டும். அதே நேரம், மழைக்காலத்தில் வாய்ப்பசிக்கு கணக்குத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அஜீரண கோளாறுகளால் அவதிப்படுவார்கள். அதனால் மதிய உணவில் தூதுவளைக் கீரையில் பூண்டு, சின்னவெங்காயம், உப்பு போட்டு நல்லெண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இதைச் சாதத்தில் பிசைந்து இரண்டு உருண்டை சாப்பிட்டுவிட்டு வழக்கமான மதிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரி புதினா கஷாயமும் அவசரத்துக்கு உதவும். ஒரு பிடி புதினா இலை, ஒரு டம்ளர் தண்ணீர் இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்தபிறகு, வடிகட்டிக் கொள்ளுங்கள். இளம் சூடாக இருக்கும்போது இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குடித்தால் வழக்கமாக மழைக்காலத்தில் வந்து தொல்லைப் பண்ணும் சளி, இருமல், தொண்டைக் கமறல் போன்றவை ஓடியே போய்விடும்.

வழக்கமாக நம்ம ஊரில் பிரண்டையில் செய்யும் துவையல், ரசம், மழைக்காலத்தில் ரொம்ப பாப்புலர். பிரண்டையை இடித்து கரைசல் தயார் பண்ணிட்டு அதில் புளி, காரம் தூக்கலாகப் போட்டு சமைத்தால் அட்டகாசமாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன் சூப்

இந்தக் காலத்தில் சுடச் சுட சூப் குடித்தால் சூப்பரா இருக்கும். வழக்கமா நாம ஹோட்டலில் குடிக்கிற ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள் :

சோளக்கதிர் - 4, வெள்ளை வெங்காயம் - 1, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், அஜினோ மோட்டோ - அரை டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு, உப்பு, சர்க்கரை - தேவையான அளவு, சோயா சாஸ் - சில துளிகள், இஞ்சி - ½ அங்குலத்துண்டு.

செய்முறை : வெண்ணெயில் சில நிமிடங்கள் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். சோளத்தை உரித்து, பெரிய கண் உடைய துருவியில் லேசாகத் துருவிக்கொள்ளவும். நடுத்தர அளவுடைய பாத்திரத்தில் துருவிய சோளத்தை எடுத்துக்கொண்டு, பால், தண்ணீர் சேர்க்கவும். அதோடு வதக்கிய வெங்காயம், இஞ்சி சேர்க்கவும். பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் சோளம் நன்கு வேகும் வரையில் வெயிட் வைத்தபின் வேகவிடவும். வெந்தபின் ஆறவைத்து, இஞ்சித்துண்டை எடுத்துவிடவும். வேகவைத்த முழு சோள மணிகள் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ளவற்றை மிக்ஸியில் கடைந்து நைசாக அரைத்துக்கொள்ளவும். நன்கு வடிகட்டி தேவையான திட்டத்திற்குத் தண்ணீராக்கிக் கொள்ளவும். உப்பு, சர்க்கரை, அஜினோ மோட்டோ சேர்த்து கொதிநிலை வரும்வரை சூடாக்கவும். நடுவே கலந்துவிடவும். வேக வைத்த சோள மணிகளையும் இத்துடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் சோயா சாஸ், மிளகுத்தூள் தூவவும்.

வெஜிடபிள் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு - ½ கப், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் _ லு கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்). புளித்த கெட்டித் தயிர் - 3 டேபிள் ஸ்பூன். சமையல் சோடா - ½ டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை : பருப்பைக் கழுவி தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். சிறிது எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து இறக்கவும். வதங்கிய காய்கறிகளை அரைத்த விழுதுடன் கலந்து தயிர், சோடா சேர்க்கவும். நன்றாகக் கலந்து எண்ணெய் தடவிய பெரிய குக்கர் தட்டில் பரப்பி இட்லி போல ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி நன்றாக ஆற வைக்கவும். இதை நீளவாக்கில் சின்னத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து சூடாகப் பரிமாறவும்.

சில சமயங்களில் தோசை மாவு ரொம்பவும் புளித்துவிடுகிறது. மிச்சமுள்ள மாவை கொட்டவும் மனசு வரலை. இந்தப் புளித்த தோசை மாவில் ஏதாவது ரெஸிபி செய்ய முடியுமா?

_ தீர்க்கதரிசி, சேலம்_2.

ஓ... தாராளமாகச் செய்யலாமே! புளித்த தோசை மாவில் சிறிது நறுக்கிய, வெங்காயம், பச்சைமிளகாய், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக்கி, காயவைத்த எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இந்த மொறுமொறு உருண்டைகள் படு டேஸ்டியாக இருக்கும். மாவு உருண்டை போட முடியாமல் மாவு ரொம்பவும் தளர்ந்திருந்தால் ஒரு கைப்பிடி ஜவ்வரிசியை மாவில் சிறிதுநேரம் ஊறவைத்து உருண்டைகள் போடலாம்!

(கமகமக்கும்)
_ ஜனனி

No comments: