Saturday, November 18, 2006

செல்லக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகள்

‘‘விதவிதமா குழம்பு வைக்கவும், பலகாரங்கள் செய்யவும் எங்களுக்கு குறிப்புகள் கொடுத்து கலக்கிட்டிருக்கீங்க. எல்லாம் சரிதான்! ஆனா, எங்களோட இன்னொரு முக்கியமான தேவையை இன்னும் நீங்க கண்டுக்கவே இல்லையே!’’ என்று வாசகிகளிடமிருந்து நமக்கு நிறைய கடிதங்கள்!
Issue Date: 25-02-05


அந்த இன்னொரு தேவை & குழந்தைகளுக்கான சத்தான உணவுகளை எப்படி தயாரிப்பது என்பது பற்றிய குறிப்புகள் தான்!


‘‘முன்னேயாவது கூட்டுக்குடித்தனம் இருந்தது! குழந்தை களுக்கு சாப்பிட என்ன தரணும்னு வழிகாட்ட தாத்தா, பாட்டினு பெரியவங்க இருந்தாங்க. இப்போ நிறைய தனிக்குடித்தனங்கள் வந்தாச்சு. வாண்டுகளுக்கு என்ன மாதிரி உணவு கொடுத்தா ஆரோக்கியமா வளருவாங்கனு தெரியாம என்னைப் போல பல இளம் அம்மாக்கள் தடுமாறிட்டிருக்காங்க’’ என்று விரிவாகவே கடிதம் எழுதியிருந்தார் ஒரு வாசகி.

இப்படியரு கடித படையெடுப்புக்கு பிறகுமா நம்மால் சும்மா இருக்கமுடியும்?

குழந்தைகளுக்கான உணவில் என்னவெல்லாம் இருந்தால் அது ஊட்டமாக இருக்கும் என்று ஊட்டச் சத்து நிபுணரான ஷைனி சந்திரனிடம் விசாரித்தோம். ‘‘நாம் மிக சாதாரணமாக நினைக்கும் அவல், எள், பசலைக்கீரை போன்ற பொருள்களிலெல்லாம் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன’’ என்று தொடங்கி, தகவல்களை ஷைனி அடுக்க, அதையெல்லாம் அப்படியே ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்திடம் நாம் விவரித்தோம். ‘‘ரொம்ப நல்லதா போச்சு. இந்த பொருட்களை வெச்சு சுவையான ரெசிபிக்களை கொடுத்து நான் அசத்திடறேன்’’ என்று உடனடியாக களமிறங்கிவிட்டார் அவர்.


விளைவு, அற்புதமாக மலர்ந்திருக்கிறது இந்தத் தொகுப்பு!


ரேவதி சண்முகம் & ஷைனி சந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த ரெசிப்பிகள், இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கானது. ஒவ்வொரு உணவிலும் என்ன சத்து உள்ளது என்ற ஷைனியின் கமென்ட்டையும் கூடவே தந்திருக்கிறோம். போனஸாக, அடம்பிடிக்கும் குழந்தைகளையும் சுலபமாக சாப்பிட வைக்க, சில அவசியமான டிப்ஸ்களையும் தந்திருக்கிறார் ஷைனி.

உங்கள் செல்லக் குழந்தைகளுக்காக ‘அவள்’ தரும் ஆரோக்கிய பரிசு இது!




சத்துமாவு கஞ்சி



கஞ்சி தயாரிப்பது பற்றி சொல்லும் முன்பு, அதற்கான சத்து மாவு தயாரிப்பது பற்றி பார்த்து விடுவோம்.



தேவையானவை:

புழுங்கலரிசி - 100 கிராம், புட்டரிசி - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், பாசிப்பயறு - 100 கிராம், கொள்ளு - 50 கிராம், ராகி - 200 கிராம், கம்பு - 100 கிராம், வெள்ளை சோளம் - 100 கிராம், மக்காச்சோளம் - 100 கிராம், வெள்ளை சோயா - 100 கிராம், பார்லி - 100 கிராம், பாதாம் - 50 கிராம், முந்திரி - 50 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், சம்பா கோதுமை - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை: அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள். இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடுங்கள். அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் (அதாவது, இரண்டாம் நாள்) பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள். நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள். பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் (சலிக்கத் தேவையில்லை). சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு இது. காலை உணவு சாப்பிட முடியாத அவசரத்தில் இதை
ஒரு கப் குடித்தால் போதும்.






தானிய லட்டு




தேவையானவை:

சத்து மாவு (தயாரிப்பு முறை முன்பக்கத்தில்) & 1 கப், பொடித்த சர்க்கரை & 1 கப், நெய் & தேவைக்கு.


செய்முறை:


பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல், சலித்துக் கொள்ளுங்கள். இதை, சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள். நெய்யை சற்று சூடாக்கி, மாவு & சர்க்கரைக் கலவையில், சிறிது சிறிதாக ஊற்றி, கலந்துகொண்டே வாருங்கள். மாவை உருண்டை பிடித்துப் பார்த்தால், உதிராமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான பக்குவம். அந்தப் பக்குவம் வந்ததும், நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
சுவையான இந்த தானிய லட்டில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிரம்பியிருப்பதால், குழந்தைகளின்
வளர்ச்சிக்கு உகந்தது.

பீட்ரூட் கீர்
தேவையானவை:

பீட்ரூட் & 1, பால் & 1 லிட்டர், முந்திரி & 8, பாதாம் & 8, சர்க்கரை & அரை கப், பச்சைக் கற்பூரம் & 1 சிட்டிகை, ஏலக்காய்த் தூள் & கால் டீஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் & 3 டேபிள் ஸ்பூன், சாரைப் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:



பீட்ரூட்டைக் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக நறுக்குங்கள். அதோடு இரண்டு கப் தண்ணீர், முந்திரி, பாதாம் சேர்த்து, குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்குங்கள். பாலை, முக்கால் பாகமாக குறையுமளவுக்குக் காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிடுங்கள்.

பின்னர், குக்கரைத் திறந்து, பாதாமை எடுத்துத் தோல் நீக்குங்கள். அத்துடன், பீட்ரூட், முந்திரி, ஏலக்காய்த்தூள், கன்டென்ஸ்டு மில்க், பச்சைக் கற்பூரம் சேர்த்து, மிக்ஸியில் மைய அரையுங்கள். அரைத்த இந்த விழுதை காய்ச்சி வைத்த பாலுடன் சேர்த்துக் கலக்கி, சாரைப்பருப்பு தூவி, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால்... கலர்ஃபுல் கீர், கண் இமைப்பதற்குள் காலியாகிவிடும்.

குறிப்பு: கேரட்டையும் இதே முறையில் கீர் செய்யலாம். ஆரஞ்சு நிறத்தில் அது அசத்தும்!


ஷைனியின் கமென்ட்...
பீட்ரூட்டில் உள்ள தாது உப்பும் பாலில் உள்ளபுரதமும் கால்சியமும் வலுவான எலும்புகளும் பற்களும் வளரத் துணைபுரிகின்றன. ரத்தம் உறைவதற்கும் உதவுகிறது.

ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
தேவையானவை:


பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 10, பால் & 2 கப், பாதாம் & 4, முந்திரி & 4, அக்ரூட் & 1 டேபிள் ஸ்பூன், தேன் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள். நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள். சுவைத்துப் பார்த்து குதூகலிப்பார்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.

கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:


பால் & 2 கப், கார்ன்ஃபிளேக்ஸ் & 2 டேபிள் ஸ்பூன், மலை வாழைப்பழம் (சிறியது) & 1 (அல்லது) பச்சைப்பழம் & பாதி, மில்க் பிஸ்கெட் & 2, சர்க்கரை & 3 டீஸ்பூன்.




செய்முறை: பாலைக் காய்ச்சி, அதில் சர்க்கரை, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கெட் சேர்த்து, நன்கு ஊறவிடுங்கள். ஆறியதும், வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி பாலுடன் சேர்த்து, மிக்ஸியில் சில நொடிகள் அடித்து, நன்கு குளிரவைத்து, பரிமாறுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம், வைட்டமின் பி6, பாலின் புரதம், கார்ன்ஃபிளேக்ஸின் மாவுச்சத்து ஆகியன, குழந்தைகளுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றன. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பொதுவான வளர்ச்சிக்கும் இது ஏற்றது.

கீரை கட்லெட்
தேவையானவை:

உருளைக் கிழங்கு & 4, பசலைக் கீரை & 1 கட்டு, பச்சை மிளகாய் & 2, இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 2 பல், சீஸ் (துருவியது) & அரை கப், மைதா & கால் கப் (அல்லது) பிரெட் ஸ்லைஸ் & 3, பிரெட் தூள் & தேவையான அளவு, எலுமிச்சம்பழச்சாறு & 1 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் & கால் கப், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:


உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரையுங்கள். இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேருங்கள். அத்துடன் மைதா அல்லது உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

பின்னர், கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரையுங்கள். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். ஆனால், புகையக் கூடாது. பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.


ஷைனியின் கமென்ட்...
கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து,
பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும். தெளிவான கண்பார்வைக்கும் உதவும்.

சீஸ் ஸ்டிக்ஸ்
தேவையானவை:


மைதா & 1 கப், சீஸ் துருவல் & கால் கப், சீஸ் க்யூப்ஸ் & 3, மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் & 2 சிட்டிகை. நெய் & ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு & சிறிதளவு, எண்ணெய் & தேவைக்கு.




செய்முறை:

மைதாவுடன் பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, துருவிய சீஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இடுங்கள். சீஸ் க்யூப்களை எடுத்துத் துருவி, பூரி மேல் தூவுங்கள். அதை மற்றொரு பூரியால் மூடி, பாய் சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுங்கள்.

பல் ‘துறுதுறு’வெனும் பிள்ளைகளுக்குக் கடிப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சத்தான ஸ்டிக்ஸ்!



ஷைனியின் கமென்ட்...
சுலபமாக செய்யக்கூடிய இந்த சீஸ் ஸ்டிக்ஸில், கால்சியமும் புரதமும் நிறைந்துள்ளன. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு உதவும். நரம்பு மண்டலத்தை உஷார் நிலையில் வைத்திருக்கவும் உதவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
தேவையானவை:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 20, பாதாம் & 15, முந்திரி & 15, கொப்பரை (பொடியாக நறுக்கியது) & 2 டேபிள் ஸ்பூன், அக்ரூட் & 2 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் துருவல் (தேவையானால்) & அரை கப்.


செய்முறை:

பேரீச்சம்பழம், பாதாம், அக்ரூட்டை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். கொப்பரைத் துருவல் நீங்கலாக, மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். உருட்டிய பின், தேவையானால் உருண்டைகளை கொப்பரைத் துருவலில் புரட்டியெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் உருண்டைகளில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்தும் கொழுப்புச்சத்தும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

சீதாப்பழ மில்க் ஷேக்
தேவையானவை:

சீதாப்பழம் (நடுத்தர அளவு) & 2, காய்ச்சிய பால் & 3 கப், சர்க்கரை & 4 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் & 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சீதாப்பழத்தை இரண்டாக உடைத்து, அதிலிருக்கும் சதைப்பகுதியை ஸ்பூனால் வழித்து கிண்ணத்தில் போடுங்கள். அடுத்து, அதை கையால் பிசைந்து விதைகளை நீக்குங்கள் (ஹேண்ட் மிக்ஸர் இருந்தால், அதன் உதவியுடன் விதைகளை நீக்கலாம்). அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் சில நிமிடங்கள் அரைத்தெடுங்கள். கடைசியில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் போட்டு, விப்பர் பட்டனை உபயோகித்து ஒரு நொடி அடித்து, நிறுத்துங்கள். பின்னர், குளிரவைத்துக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

குறிப்பு: சப்போட்டா, ஆப்பிள், மாம்பழம், பட்டர் ஃப்ரூட் ஆகிய பழங்களிலும் இதே முறையில் செய்யலாம். கலர்ஃபுல்லாக இருக்கும். குழந்தைகள் விரும்பி அருந்துவார்கள். ஃப்ரெஷ் க்ரீமுக்குப் பதிலாக, பால் ஏடும் உபயோகிக்கலாம்.






ஷைனியின் கமென்ட்...
‘பழம் சாப்பிடமாட்டேன்’ என அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சாப்பிடவைக்க உதவுவதுடன், இந்த மில்க் ஷேக்கில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் உடலுக்கு வலுவையும் உறுதியையும் தரும்.

க்ரீன் சப்பாத்தி
தேவையானவை:

கோதுமை மாவு & 2 கப், வேகவைத்த பட்டாணி & அரை கப், புதினா & அரை கட்டு, மல்லித்தழை & அரை கட்டு, பச்சை மிளகாய் & 2, உப்பு & தேவைக்கு, நெய் & 1 டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தூள் & தலா அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கு, நெய் & சிறிதளவு.





செய்முறை:

புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து, நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன், கோதுமை மாவு, நெய், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு (சற்று இளக்கமாக) பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் சுட்டு, எண்ணெய் அல்லது நெய் தடவுங்கள். சைட் டிஷ் உடன் பரிமாறுங்கள்.


குறிப்பு: கேரட்டை உபயோகித்தும் இதைச் செய்யலாம். கேரட்டைத் துருவி, அதனுடன் சிறிது மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி இட வேண்டும். ஆரஞ்சு வண்ண சப்பாத்தி ரெடி!


ஷைனியின் கமென்ட்...
க்ரீன் சப்பாத்தியில் உள்ள பீட்டா கரோடின்
மற்றும் வைட்டமின் பி ஆகியன, நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

பேரீச்சம்பழ தயிர் பச்சடி
தேவையானவை:

புளிக்காத தயிர் & 2 கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) & 10, முந்திரி & 8, மாதுளை முத்துக்கள் & கால் கப், ஃப்ரெஷ் க்ரீம் & கால் கப் (அல்லது பால் ஏடு சிறிதளவு), மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிறிது, சர்க்கரை & அரை கப்.


செய்முறை:

தயிரை நன்கு வடிகட்டுங்கள். முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்குங்கள். தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம் (அல்லது) பால் ஏடு, முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள். சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.









ஷைனியின் கமென்ட்...
விசேஷமான இந்த பேரீச்சம்பழ தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கின்றன.

அவல் பொரி உருண்டை
தேவையானவை: அவல் பொரி & 2 கப், பொட்டுக் கடலை & கால் கப், எள் & கால் கப், தேங்காய் (பல், பல்லாகக் கீறியது) & கால் கப், நெய் & 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது) & முக்கால் கப்.


செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். அவல், பொட்டுக்கடலை, எள்,தேங்காய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டுங்கள். மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடுங்கள். கெட்டிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, அதில் அவல் கலவையைக் கொட்டி, நன்கு கிளறி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

குறிப்பு: பாகுக்கான பதம் அறிய... சிறிதளவு தண்ணீர் உள்ள தட்டில் ஒரு ஸ்பூன் அளவு பாகை விட்டு, அதை உருட்டி எடுத்துப் பாத்திரத்தில் போட்டுப் பார்த்தால் ‘டங்’கென்ற சத்தம் வரவேண்டும்.


ஷைனியின் கமென்ட்...
அவலிலும் வெல்லத்திலும் இரும்புச்சத்து செறிந்துள்ளது. எள்ளில் கால்சியம் மிகுந்துள்ளது. உடலுக்குத்
தேவையான இ.எஃப்.ஏ.(எஸென்ஷியல் ஃபேட்டி ஆசிட்ஸ்) உள்ளதால், இந்த அவல் பொரி உருண்டை
ஒரு முழுமையான சிற்றுண்டியாகும்.

சப்பாத்தி ரோல்ஸ்
தேவையானவை:


கோதுமை மாவு & 2 கப், நெய் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு. ரோல் செய்ய: பனீர் & 200 கிராம், (உருளை, கேரட், பீன்ஸ் போன்ற) காய்கறி கலவை & 1 கப், கரம் மசாலா & 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் & 1 டீஸ்பூன், மல்லித்தழை & 1 டேபிள்ஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் & 2, உப்பு & தேவையான அளவு, கார்ன்ஃப்ளார் & சிறிது, எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:

கோதுமை மாவுடன் நெய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசையுங்கள். பனீரைத் துருவுங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளுங்கள். அத்துடன் பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, மல்லித்தழை, உதிர்த்த பிரெட் ஸ்லைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையுங் கள். இதைச் சற்று தடிமனாக (இரண்டு விரல் கனத்துக்கு), நீள உருண்டையாக உருட்டுங்கள். கார்ன்ஃப்ளாரை நீர்க்கக் கரைத்து, உருட்டிய ரோல்களை அதில் நன்றாக நனைத்து, பிரெட் தூளில் புரட்டியெடுங்கள். பின்னர் எண்ணெயைக் காயவைத்து, அதில் பொரித்தெடுங்கள்.

அதன்பின், பிசைந்த மாவிலிருந்து நெல்லிக்காயளவு உருண்டைஎடுத்து, சிறிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இந்த சிறு சப்பாத்திகளைச் சுட்டு, ஒவ்வொரு சப்பாத்தியிலும் மேலே சொன்ன ரோல்ஸை வைத்துச் சுருட்டி, பல் குத்தும் குச்சியால் குத்திவிடுங்கள் (சாப்பிடும்போது இதை எடுத்துவிட மறக்காதீர்கள்). சாஸ§டன் பரிமாற... சற்று நேரத்தில் காலியாகும்.



ஷைனியின் கமென்ட்...
இந்த சப்பாத்தி ரோல்ஸில் புரதம், வைட்டமின்,
நார்ச்சத்து அனைத்தும் உள்ளன. உங்கள் குழந்தையை சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் வைத்திருக்க
இந்தச் சத்துக்கள் அவசியம் தேவை.


சுலபமாக சாப்பிட வைக்கலாம்!

‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே... அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க இங்கே சில டிப்ஸ் தருகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன் (ஆரோக்கிய டிப்ஸ் போனஸ்!).

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.


குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.

பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் ‘பாம் பாம்’ என ஹாரனை அலறவிட, டென்ஷனின் உச்சியில் இருக்கும் அம்மாக்கள், ‘ம்... முழுங்கித் தொலை!’ என்ற அர்ச்சனையோடு, இட்லியையோ, தோசை யையோ குழந்தையின் வாயில் திணித்து, விழிபிதுங்க வைப்பார்கள். இது ரொம்பவே தப்பு.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தை களை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை.




இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.


ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்கிறார்களே?’ என்பவர்களின் கவனத்துக்கு... காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சு களாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போதோ, அல்லது அவர்கள் கேட்கிறார் கள் என்றோ தயவுசெய்து, செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால், அதற்கே அடிமையாகும் அளவுக்கு அப் பண்டங்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளின் பஞ்சு போன்ற வயிற்றைப் பதம் பார்த்து, அவர்களுக்குப் பசியே எடுக்கவிடாமல் அவை செய்துவிடும்.

நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. ‘ஹைபர் ஆக்டிவிடி’ எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்!

சிலர், ‘பால் குடிக்கமாட் டேங்கிறான்’ என்று கூறி, சில துளிகள் டிக்காஷன் விட்டுக் கொடுப்பார்கள். குளிர்பானத்தை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்போரும் உண்டு. இவை ரொம்ப தப்பான விஷயங்கள்.

எந்த உணவிலும் முடிந்தவரை ஜீனியைத் தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க் கரை, கருப்பட்டி போன்ற வற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். அவ்வளவும் இரும்புச் சத்து! இல்லையெனில், இயற்கையே நமக்குத் தந்திருக்கும் அற்புத இனிப்பான தேன் சேர்க்கலாம்.

செலவைப் பார்க் காமல், பல நிறங்களில், பல வடிவங்களில், பிளேட்டுகள், கிண்ணங் கள், ஸ்பூன்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே தட்டில் போட்டுக் கொடுப்பதுகூட, குழந்தைகளுக்கு அலுப்பூட்டும். ‘தோ பார்றா கண்ணா, மிக்கி மவுஸ் ஷேப் பிளேட்டுல பப்பு மம்மு’ என்றோ, ‘எங்க செல்லத்துக்கு இன்னிக்கு ஸ்டார் ஷேப் பிளேட்டுலதான் டிபனாம். உங்க யாருக்கும் கிடையாது’ என்றோ சொல்லிப் பாருங்கள். பிளேட்டின் மேலுள்ள கவர்ச்சி, கிடுகிடுவென உணவை உள்ளே இழுக்கும்.

தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்?


உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.


பழ ஸ்ரீகண்ட்
தேவையானவை:


புளிக்காத கெட்டித் தயிர் & 2 கப், பழக்கலவை (ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம்) & 1 கப், சர்க்கரை & தேவையான அளவு, குங்குமப்பூ & ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் & கால் டீஸ்பூன், பால் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

தயிரை, சாதாரண வடிகட்டியில் ஊற்றி தண்ணீரில்லாமல் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். பழங்களை மிகவும் பொடியாக நறுக்குங்கள். வடிகட்டிய தயிரில், சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பாலை சூடாக்கி, குங்குமப்பூவை அதில் ஊறப்போட்டு, கரையுங்கள். தயிர் கலவையில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பழங்கள் சேர்த்து நன்கு கலந்து, பூரி, சப்பாத்தியுடன் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
பாலின் நன்மைகள் மற்றும் பழங்களில் உள்ள புரதம், வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை
குழந்தைகளின் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பால் பிடிக்காத
பிள்ளைகளுக்கு, இதை செய்து கொடுக்கலாம்.

சீஸ் கேரட் சாண்ட்விச்
தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் & 10, கேரட் (துருவியது) & 1 கப், சீஸ் (துருவியது) & அரை கப், வெண்ணெய் & 4 டேபிள் ஸ்பூன், பூண்டு & 3 பல், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிட்டிகை.


செய்முறை:

பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நறுக்குங்கள். பூண்டை நசுக்குங்கள். வெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கி, அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் துருவிய கேரட்டை சேருங்கள். ஐந்து நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி சீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள்.


ஒரு பிரெட் ஸ்லைஸின்மேல், இந்தக் கலவையில் சிறிதளவைத் தூவி, மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். வெண்ணெய் தடவி, டோஸ்டரில் ரோஸ்ட் செய்யுங்கள். அல்லது, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
இந்த சாண்ட்விச்சிலுள்ள பீட்டா கரோடின்,குழந்தைகளுக்குசருமஆரோக்கியம்மற்றும்தெளிவான பார்வையை தருவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சீஸ், வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம்!

ஓட்ஸ் உப்புமா பால்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் & 1 கப், காய்கறி (கேரட், பட்டாணி, பீன்ஸ், கோஸ்) கலவை & 1 கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, மல்லித்தழை & சிறிது, சீஸ் & 2 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளார் & கால் கப், பிரெட் தூள் & சிறிதளவு, உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.




செய்முறை:


வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறி, உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கி, ஒன்றரை கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஓட்ஸ், துருவிய சீஸ், நறுக்கிய மல்லித்தழை சேர்த்து, நடுத்தர தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.

கார்ன்ஃப்ளாரை நீர்க்கக் கரைத்து, உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.


ஷைனியின் கமென்ட்...
கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிக புரதமும் இதிலுள்ள ஓட்ஸின் சிறப்பம்சங்கள். காய்கறி சேர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போனஸாக
குழந்தையின் உடலுக்குக் கிடைக்கின்றன.

டிரை கலர் சாண்ட்விச்

தேவையானவை:

வெண்ணெய் & 50 கிராம், பிரெட் ஸ்லைஸ் & 1 பாக்கெட்.


மூன்று அடுக்குகள் கொண்ட இதன் முதல் அடுக்குக்கு: பீட்ரூட் & 1, பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 1, காய்ந்த மிளகாய் & 2, தேங்காய்த் துருவல் & 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு & தலா அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, புளி & சிறு துண்டு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன். இரண்டாவது அடுக்குக்கு: உருளைக் கிழங்கு & 3, தேங்காய்ப்பால் & அரை கப், பச்சை மிளகாய், இஞ்சி விழுது & 1 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 1 டேபிள் ஸ்பூன். மூன்றாவது அடுக்குக்கு: வேகவைத்த பட்டாணி & 1 கப், புதினா & ஒரு கைப்பிடி அளவு, மல்லித்தழை & ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் & 1, சாட் மசாலா & அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு.

செய்முறை:


முதலில் பீட்ரூட்டைக் கழுவித் தோல் சீவுங்கள். வெங்காயம், தக்காளியை நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிய தும் தக்காளி, பீட்ரூட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, பின்னர் உப்பு, புளி சேர்த்து கிளறி இறக்கி ஆறவிட்டு, நன்கு அரைத்து எடுங்கள். அடுத்ததாக, உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து இஞ்சி, மிளகாய் விழுது, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறி இறக்குங்கள். எலுமிச்சம்பழச்சாறு ஊற்றி, நன்கு கலந்துகொள்ளுங்கள். இறுதியாக, பட்டாணியை நன்கு மசித்து புதினா, மல்லித்தழையைச் சுத்தம் செய்து பச்சை மிளகாய், எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைத்தெடுங் கள். அதனுடன் மசித்த பட்டாணி, சாட் மசாலா கலந்து வையுங்கள்.

இப்போது பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கி, ஸ்லைஸின் மேலும் சிறிது வெண்ணெய் தடவுங்கள். ஒரு ஸ்லைஸின் மேல் பீட்ரூட் சட்னியைத் தடவி, மற்றொரு ஸ்லைஸால் மூடி, அதன்மேல் உருளைக்கிழங்கு கலவையைத் தடவுங்கள். அதையும் பிரெட் ஸ்லைஸால் மூடி, பட்டாணிக் கலவையைத் தடவுங்கள். அதன்மேல் மற்றொரு ஸ்லைஸால் மூடி, குறுக்கே வெட்டிப் பரிமாறுங்கள்.






ஷைனியின் கமென்ட்...
மூவர்ணத்தில் கண்கவரும் இந்த சாண்ட்விச்சில்,
குழந்தைகள் சாப்பிடும் உணவை, சக்தியாக மாற்றுவதற்கு தேவையான தாதுக்கள் அடங்கியுள்ளன.

ஃப்ளோட்டிங் பால்ஸ்

தேவையானவை:

உளுந்து & அரை கப், தேங்காய்ப் பால் & 2 கப், பால் & 1 கப், வெல்லம் & 2 கப், ஏலக்காய்த்தூள் & 1 டீஸ்பூன், முந்திரி விழுது & 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உளுந்தை அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் முந்திரி விழுதைச் சேர்த்து இறக்குங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரைய விட்டு வடிகட்டுங்கள். பாலுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து வையுங்கள். ஊறிய உளுந்தைப் பொங்கப் பொங்க (வடைமாவு பதத்தில்) அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு போண்டாக்களாகப் பொரித்து, பாலில் போடுங்கள். இளஞ்சூடாகப் பரிமாறுங்கள்.





ஷைனியின் கமென்ட்...
இந்த உளுந்து பால்ஸ், எக்கச்சக்கமாய்ப் புரதச்சத்து நிரம்பிய அற்புத சிற்றுண்டி. குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது, இந்தப் புரதச் சத்துதான்.

தோசை சாண்ட்விச்

தேவையானவை:

தோசை மாவு & 2 கப், உருளைக்கிழங்கு & 2, நறுக்கிய காய்கறிக் கலவை & 1 கப், மிளகாய்த் தூள் & அரை டீஸ்பூன், மல்லித்தழை & சிறிது, பனீர் (துருவியது) & அரை கப், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசியுங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேகவைத்து சேருங்கள். மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். தோசை மாவை சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுங்கள்.

ஒரு தோசையின்மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி, சாண்ட்விச் போல் செய்து கொடுங்கள். ‘டிபன் வேண்டாம்’ என்னும் குழந்தைகளும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.



ஷைனியின் கமென்ட்...
பார்த்தால் சாதாரண தோசைதான். ஆனால், வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ§ம் புரதச்சத்தும் தாதுக்களும் நிறைந்துள்ள ‘சத்தான’ தோசை இது!

சாக்கோநட் ஸ்லைசஸ்


தேவையானவை: மேரி பிஸ்கெட் & 15, முந்திரி, பாதாம், அக்ரூட், திராட்சை & அரை கப், வெண்ணெய் & கால் கப், கோக்கோ பவுடர் & 1 டேபிள் ஸ்பூன்,கன்டென்ஸ்டு மில்க் & கால் கப், அத்திப்பழம் (பதப்படுத்தியது) & 4,சர்க்கரை & 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

பிஸ்கெட்டை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், அக்ரூட்டைப் பொடியாக நறுக்குங்கள். பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பவுடர், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், நறுக்கிய பருப்புகள் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

வெண்ணெயை உருக்கி, சூடாக பிஸ்கெட் கலவையில் சேர்த்துப் பிசையுங்கள். இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, சற்றுக் கனமாக நீளவாக்கில் உருட்டி, ஃப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, ஸ்லைஸ் செய்து பரிமாறுங்கள். சமையல் வேலையே இல்லாத சத்தான உணவு ரெடி!


ஷைனியின் கமென்ட்...
இந்த ஸ்லைஸில் இரும்புச்சத்து, புரதச் சத்து,
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ நிரம்பியுள்ளது. சருமப் பாதுகாப்புக்கும் நோய் எதிர்ப்புச்
சக்தியை வளர்ப்பதற்கும் இவை தேவை.

மினி பிஸ்ஸா

தேவையானவை:

தோசை மாவு & 2 கப், சீஸ் (துருவியது) & அரை கப், மல்லித்தழை & சிறிது, மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், கேரட் (சிறியது) & 1, குடமிளகாய் (சிறியது) & 1, பெரிய வெங்காயம் & 1, தக்காளி (சிறியது) & 1, எண்ணெய், உப்பு & தேவையான அளவு.


செய்முறை:

கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி (விதைப் பகுதியை நீக்கிவிடுங்கள்) ஆகியவற்றை மிக மெல்லியதாக நறுக்கி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைச் சிறுசிறு தோசைகளாக ஊற்றுங்கள். அதன்மேல் காய்கறிக் கலவை, சிறிது மல்லித்தழை, மிளகுத்தூள், துருவிய சீஸ் தூவி (சுற்றிலும் எண்ணெய் விட்டு) நன்கு வேகவிட்டு எடுங்கள்.

இந்த Ôஹோம் மேட்Õ பிஸ்ஸாவுக்கு குழந்தைகளிடம் ஏகப்பட்ட கிராக்கி இருக்கும், பாருங்கள்!


ஷைனியின் கமென்ட்...
பிஸ்ஸாவில் சேர்க்கும் காய்கறிகளில் அடங்கியுள்ள பீட்டா கரோடினும் சீஸில் உள்ள கால்சியமும் சரும வளர்ச்சிக்கும் பொதுவான வளர்ச்சிக்கும் தேவையான முக்கிய அம்சங்கள்.

அரிசி, மொச்சைப் பருப்பு சாதம்


தேவையானவை:

பச்சரிசி & 1 கப், பச்சை மொச்சை & அரை கப், துவரம்பருப்பு & அரை கப், பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 2, பச்சை மிளகாய் & 2, தேங்காய்த் துருவல் & 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது & 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் & தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

அரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.


எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, மொச்சையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.


ஷைனியின் கமென்ட்...
மாவுச் சத்து எனும் கார்போஹைட்ரேட் (அரிசி),
புரதச் சத்து மற்றும் வைட்டமின்கள் (பருப்பு), நார்ச்சத்து (மொச்சை) ஆகியவை கலந்துள்ள சரிவிகித உணவு இது.

காளான் பஜ்ஜி



தேவையானவை:

பட்டன் காளான் & 15, கடலை மாவு & அரை கப், கார்ன்ஃப்ளார் & 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு & 1 டேபிள் ஸ்பூன், மைதா & 1 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள், மிளகாய்த் தூள் & தலா 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

காளானைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரையுங்கள். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.

காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி, உப்பு நீரில் சுத்தம் செய்து, அரைவேக்காடாக வேகவைத்து, நீரை வடித்துவிட்டு, இதேபோல் கடலைமாவு கலவையில் நனைத்து, பஜ்ஜி செய்யலாம்.



ஷைனியின் கமென்ட்...
காளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை.

டிரை கலர் ரைஸ்

தேவையானவை:

வேகவைத்த சாதம் & 3 கப். முதல் கலருக்கு: தக்காளி & 1, பீட்ரூட் & பாதி, கேரட் & பாதி, மிளகாய்த்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலா & கால் டீஸ்பூன், நெய் &1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு. இரண்டாவது கலருக்கு: பனீர் (துருவியது) & கால் கப், சீஸ் (துருவியது) & 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & சிட்டிகை. மூன்றாவது கலருக்கு: புதினா இலை & 15, மல்லித்தழை & சிறிது, பச்சை மிளகாய் & 1, தேங்காய்த் துருவல் & 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 1 பல், எண்ணெய் அல்லது நெய் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கு.


செய்முறை:

தக்காளி, பீட்ரூட், கேரட் ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாக அரையுங்கள். நெய்யைக் காயவைத்து, அரைத்த கலவையைச் சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறி, ஒரு கப் சாதத்தை அதனுடன் கலந்துவிடுங்கள். இது முதல் கலர் சாதம்!

இரண்டாவது கலருக்கு, அதற்கென கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு கப் சாதத்தில் நன்கு கலந்துவிடுங்கள்.

மூன்றாவது கலருக்கு, கொடுத்துள்ள ஆறு பொருள்களையும் ஒன்றாக, நன்கு அரையுங்கள். நெய்யைக் காயவைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதை ஒரு கப் சாதத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்குங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி, சிவப்பு கலரில் ஜொலிக்கும் முதல் சாதத்தில் சிறிதளவு எடுத்து பரவினாற்போல போடுங்கள். அதன்மேல், இரண்டாவதாக வெள்ளை சாதம், கடைசியில் பச்சை சாதம் என்று ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு, அழுத்திவிடுங்கள். கிண்ணத்துடன் பத்து நிமிடங்கள் ஆவியில் வைத்தெடுத்து, ஆறவிட்டு, தட்டில் கவிழ்த்துப் பரிமாறுங்கள்.





ஷைனியின் கமென்ட்...
இந்த மூவர்ண சாதம், வைட்டமின்களை வாரி வழங்குவதுடன் கால்சியத்தையும், புரதச் சத்தையும் போனஸாக தருகிறது.

பிஸ்கெட் ட்ரீட்



தேவையானவை:

உப்பு பிஸ்கெட் & 20, வெள்ளரி & பாதி, கேரட் & பாதி, தக்காளி & 1, பனீர் & 100 கிராம், சாட் மசாலா & 1 டீஸ்பூன், உப்பு & சிறிது, ஓமப்பொடி (விருப்பப்பட்டால்) & அரை கப்.


செய்முறை: வெள்ளரி, கேரட், தக்காளி, பனீர் ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சாட் மசாலா, உப்பு சேர்த்துக் கலக்குங்கள். ஒவ்வொரு பிஸ்கெட்டின் மீதும் இந்தக் கலவையைச் சிறிதளவு பரவினாற்போல் வைத்து (குழந்தைக்குப் பிடிக்கும் என்றால்) ஓமப்பொடி தூவிக் கொடுங்கள்.



ஷைனியின் கமென்ட்...
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகளின் சத்தைத் தர எளிய வழி இது. விளையாடியபடியே ஒரே வாயில் இந்த சத்து பிஸ்கெட்டுகளை அடக்கிக்கொள்வார்கள்.

துருவல் சிப்ஸ்

தேவையானவை:


உருளைக்கிழங்கு & 1 கிலோ, முந்திரி & 50 கிராம், திராட்சை & 25 கிராம், கார்ன்ஃப்ளேக்ஸ் & 1 கப், கொப்பரை & பாதி, சர்க்கரை & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவைக்கு.


செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, கேரட் துருவியால் துருவிக்கொள்ளுங்கள் (அல்லது) மிக மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரண்டு, மூன்று முறை நன்கு அலசுங்கள். எண்ணெயைக் காயவைத்து, ஒரு கை உருளைக்கிழங்கு துருவலை எடுத்துப் பிழிந்து, எண்ணெயில் போடுங்கள். நன்கு வெந்ததும் எடுங்கள். இதேபோல் எல்லாத் துருவலையும் வறுத்தெடுங்கள்.


தீயைக் குறைத்து, காயும் எண்ணெயில் முந்திரி, திராட்சையைத் தனித்தனியே வறுத்தெடுங்கள். மேலும் சிறிது தீயைக் கூட்டி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கார்ன்ஃப்ளேக்ஸைப் போட்டுப் பொரித்தெடுங்கள். கொப்பரையை மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள். உருளை, முந்திரி, திராட்சை, கார்ன்ஃப்ளேக்ஸ், கொப்பரை, உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால் துருவல் சிப்ஸ் ரெடி!

இந்த சிப்ஸை ஒருமுறை செய்தால், அப்புறம் எப்போதும் இதற்குத்தான் உங்கள் வீட்டு குழந்தைகளின் ஓட்டு!



ஷைனியின் கமென்ட்...
சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து இந்த துருவல் சிப்ஸில். கரகர, மொறுமொறுவெனக் கேட்கும் வாண்டுகளுக்கு சரியான நொறுக்குத்தீனி. சக்தி தரும் வைட்டமின்களும் தாது உப்புகளும் அடங்கியிருப்பதால், சந்தோஷமாக சாப்பிடலாம்.

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: உசேன் மாடல்கள்: சென்னை,
பொன் வித்யாஷ்ரம் பள்ளிக் குழந்தைகள்


Issue Date: 25-02-05

No comments: