Saturday, November 18, 2006

சாண்ட்விச் டோஸ்ட்

சாண்ட்விச் டோஸ்ட்
Issue date: 13-feb-2004

மேல் நாட்டிலிருந்து வந்து நம்மைத் தொற்றிக்கொண்ட பழக்கவழக்கங்கள் எத்தனையோ. உணவு விஷயத்தில் அப்படி வந்தவற்றில் குறிப்பிடத்தக்கவை Ôசாண்ட்விச்Õ சமாசாரங்கள். இன்று நடுத்தர, சாதாரண குடும்பங்களில் கூட ÔÔகாலை டிபன் என்ன?ÕÕ என்று கேட்டால், ÔÔப்ரெட் சாண்ட்விச், ஆம்லெட்ÕÕ என்று சர்வ சாதாரண மாக வருகிறது பதில். அதிலும் வெரைட்டி தரலாமே என்றுதான் இங்கு விதவிதமாய் சாண்ட்விச்களை சொல்லியிருக் கிறேன். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இவை சும்மா சாப்பிடவே பிரமாதமாக இருந்தாலும், தக்காளி சாஸைத் தொட்டுக் கொண்டால் செம ஜோர்தான்.

பாலக் டோஸ்ட்





தேவை: உப்பு ப்ரெட் ஸ்லைஸ் 6, பசலை (பாலக்) கீரை அரை கட்டு, பச்சை மிளகாய் 2, பனீர் 100 கிராம், பூண்டு 4 பல், வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: கீரையைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். பனீரை உதிர்த்து வையுங்கள். பூண்டைத் தோல் நீக்கி, நசுக்கி வையுங்கள். மிளகாயை நறுக் குங்கள். வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மிளகாயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதனுடன் கீரை, உப்பு சேர்த்து வதக்கி மூடி வையுங்கள். கீரை நன்றாக வெந்து நீர் வற்றியதும் பனீர் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களில் இருக்கும் பிரவுன் நிறப் பகுதிகளை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் நடுவிலும் சிறிதளவு கீரைக் கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டுக்கொண்டு ப்ரெட்டின் ஓரங்களை, கலவை வெளியேறாதபடி நன்றாக அழுத்தி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள்.

கீரையைத் தொட மறுக்கும் குழந்தைகள்கூட ஆர்வத்துடன் சாப்பிடும் ஐட்டம் இது.

ஸ்வீட் சாண்ட்விச்



தேவை: ஸ்வீட் ப்ரெட் 6, கேரட் 1, பாசிப் பருப்பு கால் கப், தேங்காய்த் துருவல் கால் கப், சர்க்கரை கால் கப், பனீர் 50 கிராம், ரோஸ் எசன்ஸ் சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை வேகவைத்து, நீரை வடித்துவிடுங்கள். கேரட்டைத் துருவுங்கள். பனீரை உதிர்த்து வையுங்கள். ப்ரெட், நெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.


ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் மீதும் சிறிதளவு கேரட் கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். ஓரங்களைச் சிறிதளவு தண்ணீர் தொட்டு அழுத்தி விடுங்கள். இதனை சூடான தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வையுங்கள்.


மாலை நேர டிபனாக சாப்பிட மகத்தான சமாசாரம் இந்த ஸ்வீட் சாண்ட்விச்.

ஓப்பன் சாண்ட்விச்




தேவை: உப்பு ப்ரெட் 6, முளை கட்டிய பாசிப் பயறு கால் கப், பிஞ்சு சோள மணிகள் கால் கப், பனீர் (தேவை யானால்) 50 கிராம், பசலைக் கீரை 5 இலைகள், கேரட் (சிறியதாக) 1, எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, பூண்டு 1 பல், உப்பு தேவைக்கு, சீஸ் (பாலாடைக் கட்டி) 1 கட்டி, வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை: பூண்டு, மிளகாயை நசுக்குங்கள். பயறை ஆவியில் வேக வைத்து எடுங்கள். சோளத்தைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத் தெடுங்கள். பனீர், கேரட்டைத் துருவுங்கள். கீரையைக் கழுவி எடுத்து, பொடியாக நறுக்குங்கள். வெண் ணெயை லேசாக உருக்கி பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு கீரையைச் சேர்த்து வேகும்வரை வதக்கி, கடைசியில் பயறு, கேரட் துருவல், பனீர், சோளம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

ப்ரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ப்ரெட் ஸ்லைஸின் மேலும் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து அதன் மேல் துருவின சீஸைத் தூவுங்கள். இதனை சூடான தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு, மூடி போட்டு, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்தெடுங்கள். உருகி வழியும் சீஸோடு, கமகமக்கும் சாண்ட்விச் ரெடி. சுட்டீஸ்க்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஃபேவரிட் இது.

ஃப்ரென்ச் டோஸ்ட்


தேவை: ஸ்வீட் ப்ரெட் ஸ்லைஸ் 6, முட்டை 2, பால் கால் கப், கார்ன் ஃப்ளார் 2 டீஸ்பூன், சர்க்கரை 6 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் கால் டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: ப்ரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒவ்வொன்றையும் முக்கோணமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பாலில் கார்ன் ஃப்ளாரைக் கட்டியில்லாமல் கரைத்து, இதனுடன் சர்க்கரை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை கலக்குங்கள். கடைசியில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்குங்கள்.

ப்ரெட் ஸ்லைஸ் ஒவ்வொன்றையும் முட்டைக் கலவை யில் முக்கியெடுத்து, சூடான தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுங்கள்.


சுடச்சுடச் சாப்பிடுங்கள். பிரமாதமாக இருக்கும்.

சேமியா சாண்ட்விச்





தேவை: உப்பு ப்ரெட் ஸ்லைஸ் 6, சேமியா (வறுத் தது) கால் கப், வெங்காயம் 1, கேரட் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைப் பட்டாணி 2 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.



செய்முறை: சேமியாவை வேகவைத்து நீரை வடித்து விடுங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு கேரட், பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். கடைசியில் சேமியா, தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.




ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் நடுவிலும் சிறிதளவு சேமியா கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். இதனை சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள். மூன்றோ நான்கோ சாப்பிட்டாலும் வயிற்றை நிரப்பிடும் டிஷ் இது.

வித்தியாசமான ருசியை விரும்புகிறவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சில்லி கார்லிக் சாஸ் சேர்க்கலாம். அப்போது தக்காளி சாஸ் மற்றும் மிளகாய்த்தூளைத் தவிர்த்திடுங்கள்.

No comments: